ஆட்டோ ஓட்டுநர் அசோக் திடீரென காவல் நிலையத்தில் சரணடைந்து, இரண்டு கொலைகளை தானே செய்ததாக கூறுகிறார். விசாரணை முன்னேறும் போது, உண்மையில் கொலைகளை செய்தது யார்? அசோக் கூறுவது உண்மையா அல்லது கற்பனையா? என்ற மர்மம் படத்தின் மையமாகிறது.
ஆட்டோ ஓட்டுநரான அசோக் திடீரென காவல் நிலையத்திற்குச் சென்று, இரண்டு கொலைகளை தானே செய்ததாகக் கூறி சரணடைகிறார். அதிர்ச்சியடையும் போலீஸ், அசோக் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்குகிறது. ஆனால் விசாரணை செல்லச் செல்ல, அசோக் கூறுவது உண்மையா அல்லது அவரது மனதில் உருவான கற்பனையா என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் அந்த இரண்டு கொலைகளையும் செய்தது யார்? அசோக் ஏன் தான் கொலை செய்ததாக நம்புகிறார்? என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.
அசோக் காதல், பயம், குழப்பம், கோபம் என மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார். மஹா, பூஜா, தீப்தி கதாபாத்திரங்களில் சங்கவி, நிஷா, சிமு அத்வானி தங்களுக்கான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியாக வரும் யுகன், கதைக்கு வேகத்தை கூட்டுகிறார். மருத்துவராக அரவிந்த் ராஜும், நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரனும் கதையின் நகர்வுக்கு உதவுகின்றனர்.
காதல் கதையாக தொடங்கும் படம், பின்னர் கொலை விசாரணை, நீதிமன்றம், உளவியல் மர்மம் என வெவ்வேறு தளங்களுக்குள் பயணிப்பது சுவாரஸ்யமான அம்சம்.
அதேநேரம், அடுத்தடுத்து வரும் தகவல்கள் மற்றும் திருப்பங்கள் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. காதர் இசையும், வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவும் படத்தின் மர்மமான தன்மைக்கு கைகொடுக்கின்றன. குறிப்பாக “தூரிகை நனைந்திடும்” பாடல் ரசிக்க வைக்கிறது.
வழக்கமான கொலை விசாரணைக் கதையாக இல்லாமல், அதில் காதல், மனநிலை, நீதிமன்றம் என பல அம்சங்களை இணைத்து வித்தியாசமான களத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ்.