தரவரிசை

காட்டாளன் - திரைவிமர்சனம்

பல இடங்களில் மோகன்லாலை நினைவுபடுத்துகிறது.

Maalaimalar

கதை

கேரளாவின் வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுனில், யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை கடத்தி பெரும் லாபம் பார்க்கிறார். அவரது தொழிலுக்கு போட்டியாக வரும் கபீர் துகான் சிங், காவல்துறையின் உதவியுடன் அந்த தந்தங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த மோதலுக்கு நடுவே நாயகன் ஆண்டனி வர்கீஸ் களமிறங்குகிறார்.

ஆரம்பத்தில் சுனிலின் தரப்பில் செயல்படும் ஆண்டனி வர்கீஸ், பின்னர் பழங்குடியின மக்களின் பக்கம் நின்று கடத்தல் கும்பல்களுக்கு எதிராக போராட தொடங்குகிறார். இதனால் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த சுனிலும், கபீர் துகான் சிங்கும் கைகோர்க்க, அவர்களை எதிர்த்து ஒரு பெரிய போராட்டத்திற்கு தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த மோதலில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆண்டனி வர்கீஸ் திரையில் தோன்றும் விதம், அவரது உடல்மொழி, தோற்றம் என பல இடங்களில் மோகன்லாலை நினைவுபடுத்துகிறது. அதிக வசனங்கள் இல்லாமல், பார்வை மற்றும் உடல்மொழி மூலமாக கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு தெரிகிறது.

சுனில் வழக்கம்போல கொடூரமான வில்லனாக மிரட்டுகிறார். கபீர் துகான் சிங்கும் ஸ்டைலான வில்லனாக தனக்கான இடத்தை பிடிக்கிறார். துஷாரா விஜயன் குறுகிய நேரமே வந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் தனது உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

திரைக்கதை

காடு, பழங்குடியின மக்கள், யானை தந்த கடத்தல், கொடூரமான வில்லன்கள், மாஸான ஹீரோ, இடைவிடாத சண்டைக் காட்சிகள் என ஒரு பெரிய ஆக்‌ஷன் உலகத்தை உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் பால் ஜார்ஜ். ஆனால் அந்த உலகத்திற்குள் நம்மை முழுமையாக இழுத்துச் செல்ல வேண்டிய திரைக்கதை பலவீனமாக இருப்பதால், படம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.

யானை தந்த கடத்தல் போன்ற முக்கியமான விஷயத்தை மையமாக வைத்திருந்தாலும், அதைப் பற்றிய ஆழமான விவாதங்கள் படத்தில் இல்லாதது வருத்தம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற விஷயங்களை பேசுவதற்கான வாய்ப்பு இருந்தும், இயக்குநர் அதில் கவனம் செலுத்தவில்லை. கே.ஜி.எப், புஷ்பா, விக்ரம் போன்ற படங்களின் தாக்கம் படம் முழுவதும் தெரிகிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ரெனாடைவின் வேலை படத்தின் மிகப்பெரிய பலம். காடு சார்ந்த காட்சிகள், சண்டைக் காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்கள் அனைத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தேவையான மாஸ் உணர்வை கொடுத்தாலும், பல இடங்களில் அது அளவுக்கு அதிகமாக சத்தமாக மாறுகிறது.