வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் ‘இம்மார்ட்டல்’ சில குறைகள் இருந்தாலும் கவனம் ஈர்க்கிறது.
சென்னையில் பிரிண்டிங் பிரஸ்சில் வேலை பார்க்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், குறைந்த வாடகையில் வீடு தேடி அலையும்போது கயாடு லோகர் வசிக்கும் ஆடம்பரமான வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வீட்டின் அழகையும், கயாடு லோகரின் வசீகரத்தையும் பார்த்து அங்கு குடியேறுகிறார்.
சில நாட்களில் இருவருக்கும் நெருக்கம் ஏற்படும் நிலையில், அந்த வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் ஜி.வி. பிரகாசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. தான் தங்கியிருப்பது சாதாரண வீடு அல்ல என்பதை உணரும் அவர், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அந்த வீட்டின் மர்மம் என்ன? கயாடு லோகரின் உண்மையான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் இயல்பான நடிப்பால் கவர்கிறார். குறிப்பாக பயம், பதற்றம், குழப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கயாடு லோகருக்கு வித்தியாசமான கதாபாத்திரம். முதல் பாதியில் வசீகரமான பெண்ணாக வருபவர், கதை திரும்பியதும் டார்க் அவதாரத்தில் மிரட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
சாம் சி.எஸ். இசை, குறிப்பாக பின்னணி இசை, ஹாரர் காட்சிகளுக்கு தேவையான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் கவனம் ஈர்க்கிறது. ஒரே வீட்டுக்குள் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், கேமரா கோணங்கள் மற்றும் லைட்டிங் சலிப்பை குறைக்கின்றன. கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் ஹாரர்-பேண்டசி தன்மைக்கு வலு சேர்க்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு மர்மமான சம்பவத்தையும், நிகழ்காலக் கதையையும் இணைத்திருக்கும் இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் முயற்சி வித்தியாசமானது.
மொத்தத்தில், வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் ‘இம்மார்ட்டல்’ சில குறைகள் இருந்தாலும் கவனம் ஈர்க்கிறது.