தரவரிசை

Movie Review | திவ்யா - திரை விமர்சனம்

Divya- Movie review

மாலை மலர்

மதுரை அருகே உள்ள கிராமத்தில் தாத்தா, தம்பி உடன் வாழ்ந்து வரும் நாயகன் ஆர்.ஜே.பி, கல்லூரியில் படித்து கொண்டு பறை அடித்து வருகிறார். இவர் படிக்கும் கல்லூரியில் புதியதாக சேரும் நாயகி கேத்தியை ராக்கிங் செய்யும் போது பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில் கேத்தியின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. உடனே கேத்தியை கல்லூரியில் இருந்து நிறுத்திவிட்டு, வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். நாயகன் ஆர்.ஜே.பி, கேத்தியை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓட திட்டம் போடுகிறார்.

இறுதியில் நாயகன் ஆர்.ஜே.பி, நாயகி கேத்தி இருவரும் காதலில் ஜெயித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.ஜே.பி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் சாதாரண நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கேத்தி, அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகன் ஆர்.ஜே.பி, நண்பர்களாக நடித்திருக்கும் சபி, ஜிவி இருவரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

நாயகன் தாத்தா பவுன்ராஜ், நாயகி அப்பா அனந்த் ராம், நாயகி அம்மா கலாவதி ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.ஜே.பி, இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆணவ கொலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். பல படங்கள் இந்த சாயலில் வந்தாலும், கிளைமாக்சில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். இன்னும் வலுவான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

இசை

சங்கர் ராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவு

செல்வகுமார் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.