இதுவரை இயக்குனராக கலக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகராக புதிய பரிமாணம் எடுத்து அசத்தியுள்ளார். அதிரடி தாண்டி 'எமோஷனல்' காட்சிகளிலும் 'ஸ்கோர்' செய்திருக்கிறார்.
தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’.
கேங்ஸ்டரான லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியைக் கொடூரமாக கொலையும் செய்கிறார். இதையடுத்து ஒட்டலில் பதுங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜை போலீசார் கைது செய்வதுடன், அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத ஒரு சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து வரும் வாமிகா கபி. ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கிறார்.
உயிருக்கு பயந்து ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் போராட்டங்கள் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.
இதுவரை இயக்குனராக கலக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகராக புதிய பரிமாணம் எடுத்து அசத்தியுள்ளார். அதிரடி தாண்டி 'எமோஷனல்' காட்சிகளிலும் 'ஸ்கோர்' செய்திருக்கிறார்.
வாமிகா கபி அசத்தி இருக்கிறார். சேலை கட்டிய புயலாய் எதிரிகளிடம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். எப்போதுமே கையில் 'பாதுகாப்பு கவசத்தை' வைத்திருக்கும் அவர், லோகேஷ் கனகராஜுக்கு பாதுகாப்பாக நிற்கும் இடங்கள் சிலிர்ப்பு. ஓரிரு காட்சிகளே வந்தாலும் சஞ்சனா நினைவில் நிற்கிறார். ஈர உதட்டில் அடிக்கடி 'சிகரெட்' பற்றவைத்து கரையாக்கியிருக்க வேண்டாம்.
கிரிஷ் தயால், தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, அவினாஷ் ரகுதேவன் என அனைவருமே எதார்த்த நடிப்பை கொட்டியுள்ளனர்.
முகேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பு. அனிருத் இசை ஆட்டம் போட வைத்திருக்கிறது. மவுன ராகங்கள்...' பாடலுக்கு 'ஒன்ஸ்மோர்' போகலாம்.
விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம். ஆனாலும் ரத்தம் தெறிக்கும் இவ்வளவு வன்முறை காட்சிகள் தேவையா? கெட்ட வார்த்தைகளையும் சர்வ சாதாரணமாக உதிர்த்து இருக்கிறார்கள். 'சென்சார் போர்டு' கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ?
ஒரு கேங்ஸ்டர் கதையில் காதல், எமோஷனல், பாசம், வன்மம் என அனைத்தையும் சரிவிகிதத்தில் புகுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
டி.சி. -ரத்த சரித்திரம்.