தரவரிசை

சிட்டுக்குறிஞ்சி- திரை விமர்சனம்

கதையில் இடம்பெறும் இருவேறு காலகட்டங்களை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

சினிமா செய்திப்பிரிவு

காதல், குற்றவுணர்ச்சி, ஆணவக்கொலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிட்டுக்குறிஞ்சி, சமூக அவலங்களை வித்தியாசமான கோணத்தில் அணுகிய இயக்குநரின் முயற்சியால் கவனம் ஈர்க்கிறது. பிரான்சிஸின் ஒளிப்பதிவு மற்றும் மாறாவின் பின்னணி இசை கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி, எதிர்பாராத திருப்பங்களுடன் சிந்திக்க வைக்கும் படமாக அமைந்துள்ளது.

கதை

கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறைக்கு வனம் சார்ந்த ஆய்வுப் பணிக்காக வருகிறார் ரஜித் சி.ஆர். அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காத சூழலில், தீப்ஷிகாவின் வீட்டில் ஒருநாள் தங்குகிறார். அந்த ஒருநாள் பழக்கத்தில் தீப்ஷிகா காட்டும் அன்பும், பாசமும், அக்கறையும் ரஜித் சி.ஆரின் மனதில் காதலை உருவாக்குகிறது. இதனால் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஏற்கெனவே திருமணமான தீப்ஷிகா, அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

இதையடுத்து தனது சொந்த ஊரான கேரளாவுக்குத் திரும்பும் ரஜித் சி.ஆர்., சில நாட்கள் கழித்து மீண்டும் தீப்ஷிகாவைத் தேடி வருகிறார். அப்போது அவருக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் என்ன? தீப்ஷிகாவின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்பதற்கான விடைகள்தான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ரஜித் சி.ஆர். இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, மனதிற்குள் இருக்கும் குற்றவுணர்ச்சியை முகபாவனைகளிலும் நடிப்பிலும் வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். தீப்ஷிகா உணர்வுப்பூர்வமான நடிப்பால் மனதில் நிற்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷாசரண், விஜே பப்பு, ஜி.எம்.குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு

பிரான்சிஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. கதையில் இடம்பெறும் இருவேறு காலகட்டங்களை அழகாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். மாறாவின் பின்னணி இசை கதையின் உணர்வுகளையும், திருப்பங்களையும் உணர்ந்து பயணித்து படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கிறது. இயக்குநர் வீ.ஜே. மீனாட்சி சுந்தரம், ஆணவக்கொலை என்ற சமூக அவலத்தை வழக்கமான பாணியில் சொல்லாமல், காதல் மற்றும் குற்றவுணர்ச்சியின் பின்னணியில் வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறார். கதையின் உண்மையான பின்னணி தெரியவரும்போது திரைக்கதை மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.

ஆணவக்கொலை போன்ற இன்றும் பேசப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையை, காதல் கதையின் வழியாக எளிமையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. சில குறைகள் இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் சிந்திக்க வைக்கும் இந்த படம் கவனம் பெறுகிறது.

SCROLL FOR NEXT