தலைமுடி வியாபாரம் செய்யும் ஏ.வெங்கடேசிடம் டிரைவராகப் பணிபுரிகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது, அவருடன் அந்த தலைமுடியும் மாயமாகிறது. இதனால் அதிர்ச்சியடையும் ஏ.வெங்கடேஷ், போலீசின் உதவியை நாடுகிறார். தந்தை லிவிங்ஸ்டன் காணாமல் போனதன் பின்னணியில் மர்மம் இருப்பதை உணரும் வெற்றி, உண்மையைக் கண்டறிய களமிறங்குகிறார். அவரது தேடல் பலித்ததா? காணாமல் போன லிவிங்ஸ்டனின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.
தந்தை மீது விழுந்த பழியைத் துடைப்பதற்காக அதன் பின்னணியைத் தேடி அலையும் காட்சிகளில் வெற்றியின் அழுத்தமான நடிப்பு பாராட்ட வைக்கிறது. புன்னகை ததும்பும் பிரியாலயாவின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. லிவிங்ஸ்டனின் அப்பாவித்தனமான நடிப்பும், ஏ. வெங்கடேஷ், அபிராமி வெங்கடாசலம், மூர்த்தி, அரோல் டி. சங்கர், கராத்தே வெங்கடேசன் ஆகியோரின் பங்களிப்பும் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
கவாஸ்கர் அவினாஷின் இசையும், சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவும் கதைக்கு வலு சேர்க்கின்றன. தலைமுடிக்கும் இத்தனை பெரிய மதிப்பு இருக்கிறதா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார். புதுமையான கதைக்கரு சுவாரஸ்யம் தந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் இந்தத் தங்கம் போன்ற தலைமுடி இன்னும் அதிகமாக ஜொலித்திருக்கும்.