பீப் திரைப்படம் பாலியல் தொழிலாளியுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ராகவ் ரங்கநாதனை மையமாகக் கொண்டு, அவள் திடீர் மரணத்துக்குப் பிறகு அவர் மீது விழும் கொலை சந்தேகத்தையும் போலீஸ் விசாரணையையும் சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் வடிவில் காட்டுகிறது. ராகவ் ரங்கநாதன், யாமினி லட்சுமணன், பிரேர்ணா கன்னா உள்ளிட்டோர் நம்பகமான நடிப்பும், ஒளிப்பதிவு-இசை இணையும் படத்துக்கு வலு சேர்க்கின்றன.
பாலியல் தொழிலாளி ஒருவருடன் நெருங்கிய நட்புடன் இருக்கிறார், ராகவ் ரங்கநாதன். ஒருநாள் திடீரென்று அப்பெண் இறந்துவிட, அவரை ராகவ் ரங்கநாதன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரிக்கின்றனர். விசாரணைக்குப் பிறகு நடந்தது என்ன? கொலையாளி யார்? என்பதே படத்தின் மீதி கதை.
கேரக்டருக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ள ராகவ் ரங்கநாதன் மற்றும் அழகுடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்திய யாமினி லட்சுமணன், பிரேர்ணா கன்னா ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர்.
எல்.சண்முகசுந்தர் இயல்பாக நடித்துள்ளார். மறைந்த நிதீஷ் வீராவை திரையில் பார்க்கும்போது கண் கலங்குகிறது. ஐடிஐ ஆச்சார்யா, அருண் மோகன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, பாலாஜி, ராஜவேல், அதுல், ஜி.சிவகுமார், வெங்கட் ரமேஷ், கர்னல் ஆர்.கணேசன் ஆகியோரும் கேரக்டருக்கு ஏற்ப யதார்த்தமாக நடித்துள்ளனர்.
பிரதீப் பத்மகுமாரின் ஒளிப்பதிவு, பிரசாந்த் விஹாரியின் இசை கதையின் நகர்வுக்கு பக்க பலமாக அமைந்துள்ளன. அதிக வன்முறை இல்லாத, அறிவுக்கு வேலை கொடுக்கும் வித்தியாசமான திரில்லர் படத்தை எல்.சண்முகசுந்தர் எழுதி இயக்கியுள்ளார். சஸ்பென்சை விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படம் ‘பீப்’.