மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான சமூக அக்கறை என கவனம் ஈர்க்கும் ‘அமரம்’
வாழ்க்கையில் எந்த லட்சியமும் இன்றி பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக மலை அடிவாரத்தில் வாழ்ந்து வருகிறார் ராஜன் தேஜஸ்வர். இதற்கிடையே, பணத்திற்காக தனது தந்தையை கொலை செய்த கொலையாளி ராஜன் தேஜஸ்வரை பழிவாங்குவதற்காக தேடிச் செல்கிறார் ஐரா அகர்வால். அங்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆபத்தையும் சந்திக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
நீண்ட தாடி, முரட்டுத் தோற்றம், அதிகம் பேசாத உடல்மொழி என ராஜன் தேஜஸ்வரின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு கம்பீரத்தை கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் அவரது கதாபாத்திரம் ஹீரோயிசம் பெறுவது ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படத்தின் வேகத்தை கூட்டுகிறது.
பழிவாங்கும் பெண்ணாக ஐரா அகர்வால் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கொலைகாரர்களாக மாற்றும் முதலாளிகளின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது இயக்குநர் அருள் கிருஷ்ணாவின் முக்கியமான முயற்சி. சமூக விழிப்புணர்வையும் ஆக்ஷனையும் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறார்.
மிக்கி ஜே மேயரின் இசையும், பரத் குமாரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான சமூக அக்கறை என கவனம் ஈர்க்கும் ‘அமரம்’