சினிமா

எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் ஹிப்-ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு’

ஹிப்-ஹாப் ஆதி இயக்கத்தில் அவரே நடித்து, இசையமைத்துள்ள படமான ‘மீசைய முறுக்கு’ டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அளவுக்கு இருக்கிறது.

மாலை மலர்

அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் முதலில் இருக்கும் இப்படத்தின் டிரெய்லர், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப இந்த படம் உருவாகியிருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. இதுவரை படத்தின் டிரெய்லரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தமிழ் மொழியின் மீது இசையமைப்பாளர் ஆதிக்கு அதீத ஈடுபாடு உண்டு என்பது நாம் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாகவே "டக்கரு டக்கரு" என்ற ஜல்லிக்கட்டு பாடலை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் இயக்கியிருக்கும் படத்திற்கும் ‘மீசைய முறுக்கு’ என்று பெயர் வைத்திருக்கிறார். முறுக்கு மீசை இருந்தாலே ஒரு கம்பீரம் தான். அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘மீசைய முறுக்கு’ படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறும் போது,

“தற்போது ஹீரோ மற்றும் இயக்குனராக ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்சிக்கு நன்றி. ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்”