சினிமா

இஷான் நடிப்புக்கு பின்னணியாக இருந்த மஜீத் மஜீதி

‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாரின் நடிப்புக்கு பின்னணியாக இருந்திருக்கிறார் இயக்குனர் மஜீத் மஜீதி.

மாலை மலர்

எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்த படத்தில் தாராவி பகுதியை சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக தாராவி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜீத் மஜீதி தேர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்கவைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள். ஆகாசும், இஷானும் நெருங்கிய நண்பர்களாக படத்தில் வருவதால், இயக்குநரின் கட்டளைப்படி இருவருமே படப்பிடிப்பு தளத்திற்கு பின்னாலும் ஒன்றாக சுற்றி வந்தனர். அவர்களின் இந்த பந்தம் திரையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி படக்குழுவினரிடம் கேட்ட போது, ‘இந்த படத்தில் இஷானின் நடிப்பிற்கு பின்னணியாக இருந்தது இயக்குநர் மஜீத் மஜிதியின் திரை பார்வை தான். இஷான் ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் முன் அந்த காட்சியைப் பற்றி மிகவும் அக்கறையுடன் கேட்டு தெரிந்துகொண்டு, இயக்குநரின் எதிர்பார்ப்பை உள்வாங்கி நடித்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்கவிருக்கும் தாராவி பகுதி இளைஞர்களுடன் இஷான் ஒன்றாக பழக ஆரம்பித்துவிட்டார். அவர்களுடன் பழகி அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர்களின் உடல் மொழி, பேச்சு, பாவனை போன்றவற்றை உற்று கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? என்பதை அறிந்து அதனை அப்படியே காட்சியில் பிரதிபலித்திருக்கிறார் இஷான்.

ஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பியாண்ட் த க்ளவுட்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியாகிறது.