சினிமா

சென்னை திரும்பினார் கமல்ஹாசன் - அரசியல் சுற்றுப்பயண விவரம் 18-ந் தேதி அறிவிப்பு

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் சென்னை திரும்பினார். அரசியல் சுற்றுப்பயண விவரங்கள் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. #KamalHaasan #KamalhaasanPoliticalEntry

மாலை மலர்

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.

இந்த நிலையில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய கமல் ஹாசன், தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காக உழைக்கப் போகிறேன் என்று தெரிவித்தார். மாணவர்களுடன் கலந்துரையாடினார். பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஒரு வார காலம் அமெரிக்காவில் தங்கி இருந்த அவர் இன்று சென்னை திரும்புவதாக இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்று சென்னை திரும்பினார்.

புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதால், கமல் அவசரமாக சென்னை திரும்பினார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கட்சி பணி தொடர்பாக கமல் நற்பணி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.

குறிப்பிட்ட நேரத்தில் நிர்வாகிகளை அழைத்து, அவர்களுடன் அலோசனை நடத்தி வருகிறார். என்றாலும் அதுபற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

புதிய கட்சி குறித்து, ஏற்கனவே மாவட்ட நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. டெல்லி தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. என்றாலும், அந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து எந்த ஊர் வழியாக சுற்றுப்பயணம் செல்வது, எங்கு மக்களுடன் உரையாடுவது என்பது போன்றவை குறித்து தற்போது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது.

அவர்களிடம் தனது சுற்றுப்பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகிறார். மன்ற நிர்வாகிகள் மக்களுடன் நெருங்கி பழக வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

கமல்ஹாசனின் முதல் கட்ட சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் பற்றிய விவரம் தயாராகி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை வருகிற 18-ந் தேதி கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

கமலின் புதிய கட்சி விரைவில் பதிவு செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இதுபற்றி கூறிய மன்ற நிர்வாகி ஒருவர், “கட்சி பெயர் மற்றும் விவரங்களை வருகிற 21-ந்தேதி கமல் அறிவிப்பார். அதன் பிறகுதான் முறைப்படி தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். #KamalHaasan #KamalhaasanPoliticalEntry