சினிமா

அரசியலில் வெற்றி பெறுவேன்: காந்தியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

முதலில் புறக்கணிப்பார்கள், சிரிப்பார்கள், பின்னரே வெற்றி கிடைக்கும் என்ற மகாத்மா காந்தியின் பொன்மொழியை காந்தி ஜெயந்தியான இன்று நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார்.

மாலை மலர்

காந்தியின் 148-வது பிறந்தநாளான இன்று, காந்தி ஜெயந்தி இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காந்தியின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

அந்த வகையில் காந்தி பிறந்த தினத்தையொட்டி கமல்ஹாசன் டுவிட்டரில் மகாத்மா காந்தியின் வார்த்தைகள் பலம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

அதில், ‘முதலில் புறக்கணிப்பார்கள். பின் சிரிப்பார்கள். சண்டை போடுவார்கள். இறுதியில் வெற்றி உனக்கே’ என்ற மகாத்மாகாந்தி சொன்ன வரிகளை வெளியிட்டு, ‘காந்தியின் வார்த்தைகள் இப்போது நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய ரஜினி எம்.ஜி.ஆரும், சிவாஜியும், நம்மை போல (ரஜினி-கமல்) சினிமாவில் வெற்றிகளை குவித்தனர். ஆனால் அரசியலில் எம்.ஜி.ஆர். மட்டுமே ஜெயித்தார். சிவாஜியால் சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி பேசிய ரஜினி, இதனை கமல் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகவே கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.