சினிமா

தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொன்ன கமல்

விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி வடிவமைப்பு அருமையாக வந்துள்ளதற்காக அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்குமிடையே விஸ்வரூபம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் கமல். இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் திரைக்கதை எழுதி இயக்கி வரும் இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இராணுவ உடையில், கமல் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் பங்கு பெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஒலி வடிவமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் கமல். தற்போது ஒலி வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.

இதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமல். மேலும் அந்தப் பதிவில் மறைந்த தனது சகோதரர் சந்திர ஹாசனையும் நினைவு கூர்ந்துள்ளார்.

‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ரகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.