சினிமா

மீண்டும் மலையாள மேஜிக்... வெற்றி கூட்டணியில் புதிய படத்தில் களமிறங்கும் நடிகர் ஜீவா...

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

மலையாள இயக்குனர் முகமது முஸ்தஃபாவுடன் ஜீவா இணையும் புதிய படம் ‘ஜீவா 49’ பூஜையுடன் தொடங்கியது. நிமிஷா சஜயன் மற்றும் ஏஞ்சல் மரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவாவின் முந்தைய மலையாள இயக்குனருடன் இணைந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

நடிகர் ஜீவா தனது அடுத்த படத்திற்காக மலையாளத் திரைப்பட இயக்குனர் முகமது முஸ்தஃபாவுடன் இணையவுள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49’ (Jiiva 49) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் தொடக்க விழா பூஜையுடன் நேற்று முறைப்படி தொடங்கியது.

ஜீவாவுடன் இணைந்து நிமிஷா சஜயன் மற்றும் வாழை 2 புகழ் ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவா மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் (Passion Studios) சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

இயக்குனர் முகமது முஸ்தஃபா

நடிகராக அறிமுகமாகி இயக்குனராக மாறிய முகமது முஸ்தஃபா, தனது முதல் படமான ‘கப்பேலா’ மூலம் கேரள மாநில அரசின் ‘சிறந்த அறிமுக இயக்குனர்’ விருதைப் பெற்றவர். சமீபத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஹிருது ஹாரூன் நடிப்பில் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படமான ‘முரா’ படத்தை இயக்கியிருந்தார்.

மீண்டும் மலையாள இயக்குனருடன் ஜீவா

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், மலையாள இயக்குனர் நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு மலையாள இயக்குனருடன் ஜீவா கைகோர்த்திருப்பது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT