பிரபல குணச்சித்திர நடிகர் இர்பான். இவர் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’, ‘லைஃப் ஆஃப் பை’ உள்பட ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.
இவருக்கு சமீபத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இர்பான் கான் தற்போது லண்டனில் இதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைத்தளத்தில், ‘உங்களுக்கு அழகானவை பயங்கரமானவை என எல்லாமும் நடக்கும். நீங்கள் அவற்றை கடந்து செல்லுங்கள். எந்தவொரு உணர்வும் இறுதியானது அல்ல. உங்களை நீங்கள் இழக்கக்கூடாது. வாழ்க்கையின் தீவிரத்தைப் பொறுத்து அதனை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களது கையை என்னிடம் கொடுங்கள்" என இர்பான் கான் பதிவிட்டுள்ளார்.