சினிமா

வருமான வரி பாக்கி - நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு ஏலம்

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு ஏலம் விடப்படுவதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. #Srividya

பிரபல நடிகையான ஸ்ரீவித்யா கடந்த 2006-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

1966-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 34 ஆண்டுகள் இந்திய திரை உலகில் பிரபலமாக நடித்தார்.

ஸ்ரீவித்யாவின் கடைசி காலத்தில் அவரை கேரள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் கவனித்து வந்தார். அவரது பாதுகாப்பில் ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் உள்ளன.

ஸ்ரீவித்யாவுக்கு சென்னை அபிராமபுரம் சுப்பிரமணியபுரம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. தற்போது இதில் நடன பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இதன் வாடகை தொகை ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கிக்காக வருமான வரித்துறை வசூலித்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கித் தொகைக்காக அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்தது. 1250 சதுர அடி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

அதன் உத்தேச மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவித்யாவிடம் இருந்து வர வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரின் வீடு ஏலம் விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. #Srividya

SCROLL FOR NEXT