சினிமா

அரசியலை விட்டு தள்ளி இருக்கமாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

நான் சிறுவனாக இருந்த போதே அரசியல்வாதி, அரசியல் பற்றி எதுவும் திட்டமிடவில்லை என்றாலும், அரசியலை விட்டு தள்ளி இருக்கமாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

உதயநிதி ஸ்டாலின் தற்போது பிசியான நடிகர் ஆகிவிட்டார். ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த ‘நிமிர்’ படம் திரைக்கு வர தயாராகி இருக்கிறது.

‘‘பிரியதர்சன் இயக்கியுள்ள ‘நிமிர்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருக்கு சினிமா துறையின் அனைத்து விவரங்களும் தெரியும். மற்ற இயக்குனர்கள் போல படமாகும் காட்சி விவரத்தை முதல் நாள் இரவே அனுப்பி வைக்க மாட்டார். ‘நிமிர்’ படத்தை 36 நாட்களில் படமாக்கி முடித்தோம்.

என் படங்களுக்கான நாயகிகளை இயக்குனர்களே தேர்வு செய்கிறார்கள். பிரபல நாயகிகள் நடித்தால் வியாபாரத்துக்கு நல்லதுதான். ஆனால், ‘நிமிர்’ படத்தில் நடித்துள்ள ஹீரோயின் நமீதா பிரமோத் தமிழுக்கு புதுமுகம்.

என் மனைவி கிருத்திகா அவருடைய படங்களில் பிசியாக இருக்கிறார். என்பட வி‌ஷயங்களில் தலையிட நேரம் இல்லை. என்றாலும், நான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட்களை கேட்டு படிப்பார். ‘நிமிர்’ படத்தில் மகேந்திரன் சார் என் அப்பாவாக நடித்திருக்கிறார்.

நான் சிறுவனாக இருந்த போதே அரசியல்வாதி என்று சொல்லலாம். நான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன். தாத்தா, அப்பா தேர்தல் பிரசாரங்களில் கலந்திருக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் செல்லாத வீடே இல்லை. ஆனால், இப்போது படங்களில் பிசியாக இருக்கிறேன். இதுவரை அரசியல் பற்றி எதுவும் திட்டமிடவில்லை. என்றாலும், அரசியலை விட்டு தள்ளி இருக்கமாட்டேன்.’’ என்றார்.