புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்த ஒப்பந்தம் காலாவதியான பின்னரும், சோப்பு உறைகள் மற்றும் விளம்பரப் பொருட்களில் தனது புகைப்படங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகக் கூறி,
அந்நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு கோரி திரைப்பட நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தள்ளுபடி செய்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு பவர் சோப் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்திருந்த தமன்னா, ஒப்பந்த காலம் (2009 அக்டோபர்) முடிந்த பின்னரும் தனது புகைப்படங்களை அந்த நிறுவனம் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி 2011-ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, தமன்னா தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி 2017-ல் வழக்கை தள்ளுபடி செய்தார்.
தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தமன்னா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே. கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.