சினிமா

`கோலிசோடா 2' படக்குழுவில் இணைந்த கவுதம் மேனன்

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் `கோலிசோடா 2' படக்குழுவில் இயக்குநர் கவுதம் மேனனும் இணைந்திருக்கிறார்.

மாலை மலர்

இப்பத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சுபிக்‌ஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பலர் நடித்துள்ள இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரத்தை விஜய் மில்டன், ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டீசருக்கு இயக்குநர் கவுதம் மேனன் பின்னணி வர்ணனை கொடுத்திருக்கிறார். கவுதம் மேனனின் குரலில் டீசர் நல்லபடியாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது,

''மிக அருமையாக வந்திருக்கும் `கோலி சோடா 2' வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எனக்கும் எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி மூலம் கவுதம் அவர்களை அணுகி இந்த பின்னணி வர்ணனை பற்றி கூறி, செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட கவுதம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன். இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குனர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன்''