சினிமா

இந்திய சினிமாவின் முக்கியமான படம் இது - ஜி.வி.பிரகாஷ்

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று ஜி.வி. கூறியிருக்கிறார். #GV17 #GVPrakashKumar

மாலை மலர்

`வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என எதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருக்கும் வசந்த பாலன் அடுத்தாக ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,

`ஜி.வி.17 படப்பிடிப்பு ஆரம்பம்... சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். 

ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். ஜி.வி. நடிப்பில் `செம' படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. #GV17