இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு நேற்று புது சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக, ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி டிக்கெட் பணமாக ரூ.100 வசூலித்தால் அதில் 64 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள 36 ரூபாயைதான் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பங்கிட்டு கொள்ள வேண்டியது இருக்கிறது. கூடுதல் வரியை மக்கள் மீது திணித்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது.
எனவே, கேரள அரசை போல, தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்பு வரிகளை ரத்து செய்யக் கோரி 3-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படுகின்றன. இந்த அறிவிப்பை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ளார்.
பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், கமல்ஹாசன் உள்ளிட்ட பட அதிபர்கள் வரிவிதிப்பை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளாட்சி விதிக்கும் கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் திரைஉலகினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.