ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை எதிர்த்து பட அதிபர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருக்கும் கே.இ.ஞானவேல்ராஜா நேற்று பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.
சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். இவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் ஞானவேல்ராஜா தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காகவே தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.