சினிமா

தயாரிப்பாளர்களின் தடையை மீறி படங்கள் வெளியீடு

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, படதயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தடையை மீறி படங்கள் வெளியாகி இருக்கிறது. #TFPC

மாலை மலர்

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1-ந்தேதி முதல் படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆந்திராவிலும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

இதன் காரணமாக புதிய படங்களை திரையிடக் கூடாது என்று தயாரிப்பாளர்களக்கு, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இதை மீறி படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதையடுத்து, திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், இந்த மாதம் திரைக்கு வர வேண்டிய 20 படங்கள் வேறு தேதியை எதிர்பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், தயாரிப்பாளர்களின் தடையை மீறி ‘தாராவி’ என்ற புதிய படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இதில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதுபோல் ‘யாழ்’ என்ற படமும் வெளியாகி உள்ளது. இது ஈழதமிழர் போர் பற்றிய படம்.

தடையை மீறி ‘தாராவி’ படத்தை வெளியிட்டது ஏன் என்பது குறித்து அதன் தயாரிப்பாளர் பவித்ரன் கூறியதாவது:-

இந்த படம் மும்பை தாராவியில் வாழும் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. 110 நாட்கள் தாராவியில் தங்கி இருந்து படத்தை எடுத்தோம். கடன் வாங்கி படம் தயாரித்திருக்கிறோம். ஏற்கனவே, இந்த படத்தை இந்த தேதியில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். இது சிறிய பட்ஜெட் படம். தாமதம் ஆனால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருக்கும்.

பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆனால் தியேட்டர்கள் கிடைக்காது. எனவே, இந்த படத்தை ரிலீஸ் செய்தோம். சிறிய தயாரிப்பாளர்களைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது தவறு. இதற்கு வேறு வழிமுறைகளை காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், ‘யாழ்’ திரைப்படமும் நேற்று திரைக்கு வந்துள்ளது. ஏற்கனவே, திரைக்கு வந்து தியேட்டர் கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படம் இப்போது மீண்டும் திரைக்கு வந்திருக்கிறது. #TFPC