பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக கடந்த இரண்டு நாளாக படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்தத்தால் தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் ஆகிய இருதரப்புக்குமே பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த பிரச்சனையில் சுமூக தீர்வு காண ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஊழியர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரஜினிகாந்தின் `காலா', விஜய்யின் `மெர்சல்' உட்பட தமிழகம் முழுவதும் 40 படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டு உள்ளது. வேற்று மாநில ஊழியர்கள் உதவியுடன் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நாளை மாலை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.