தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பால், ‘பெப்சி’ தவிர வேறு தொழிலாளர்களையும், தயாரிப்பாளர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. என்றாலும் சினிமா தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினார்கள்.
இந்த நிலையில் திரைப்பட தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் பயிற்சி பெற்று திரைப்பட தொழிலில் பங்கேற்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பெப்சி’ தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சினிமா தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரஜினியின் ‘காலா’ உள்பட 30 புதிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. படப்பிடிப்புகள் ரத்து ஆனதால் தயாரிப்பாளர்களுக்கு தினமும் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
‘பெப்சி’ அமைப்பை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் வருமானம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முயற்சி நடந்தது.
இதன்படி நேற்று இரவு பட தயாரிப்பாளர்கள், பெப்சி அமைப்பு, இயக்குனர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘பெப்சி’ தலைவர் செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு 12 மணி வரை நடந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஒருசில சிறிய பிரச்சினைகள் உள்ளன. அதை பேசி தீர்ப்போம் என்று விஷால் கூறினார்.
‘நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக’ செல்வமணி அறிவித்தார்.
பெப்சியில் மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. இதில் நீக்கப்பட்ட ஒரு சங்கம் தவிர மற்ற சங்கங்களுடன் பேசி 3 நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பெப்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.