ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப், ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டிலும், கேரள ஐகோர்ட்டிலும் மனு செய்தார். திலீப்பை ஜாமீனில் விட அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
இதனால் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்ட திலீப், இன்று வரை சுமார் 2 மாதங்கள் ஜெயில் வாசம் அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையே இறந்து போன தந்தையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் திலீப், அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார்.
இதனை பரிசீலித்த கோர்ட்டு, திலீப்புக்கு அவரது தந்தையின் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேர பரோல் வழங்கியது.
ஜெயிலை விட்டு வெளியே செல்லும்போது திலீப், செல்போன் பயன்படுத்தக் கூடாது. மேலும் வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்று கோர்ட்டு கட்டுப்பாடுகள் விதித்தது. நினைவு தின நிகழ்ச்சிகள் முடிந்ததும் உடனடியாக அவர் ஜெயிலுக்கு திரும்பி விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கிடையே திலீப்பின் ரசிகர்கள் அவர் வெளியே வந்ததும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆலுவா சப்-ஜெயில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திலீப்பின் வீடு ஆலுவா ஜெயிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இப்பகுதி முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டிருந்தனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி இன்று காலை 8 மணிக்கு ஆலுவா சப்-ஜெயிலில் இருந்து திலீப், வெளியே வந்தார். அங்கு தயாராக நின்ற போலீஸ் ஜீப்பில் அவரை போலீசார் ஏற்றி வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
வீட்டில் திலீப்பின் தாயார் மற்றும் 2-வது மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்கள் திலீப்பை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதனர். திலீப்பும் கண் கலங்கினார். பின்னர் தந்தையின் நினைவுநாள் சடங்குகளை நிறைவேற்றினார்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவரை போலீசார் மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.