சினிமா

திலீப்பின் ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி: நெருக்கடியில் திலீப்

திலீப்பின் ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், நடிகர் திலீப்புக்கு நெருக்கடி முற்றியுள்ளது. அடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

நடிகை துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில், அந்த நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனிலின் கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு அதிரடியாக நடிகர் திலீப் (வயது 48) கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து நடிகர் திலீப் தனக்கு ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் திலீப் தனது வக்கீல் ராமன் பிள்ளை மூலம் கடந்த 10-ந்தேதி கேரள ஐகோர்ட்டில் 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அதன்படி திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் மற்றும் திலீப்பின் வக்கீல்கள் வாதம் செய்தனர். அரசு வக்கீல் வாதாடும்போது திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளது. அவரது மனைவி நடிகை காவ்யா மாதவனிடம் ரவுடி பல்சர் சுனில் டிரைவராக பணியாற்றி உள்ளார். மேலும் அவர்கள் இருவருடனும் பல்சர் சுனில் பலமுறை செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக கூறினார். திலீப்புக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேசமயம் திலீப் சார்பாக வாதாடிய அவரது வக்கீல் இந்த வழக்கில் நடிகர் திலீப்பை வேண்டுமென்றே சிக்கவைத்துள்ளனர். சினிமாவில் திலீப்புக்கு எதிராக உள்ளவர்களும் அவரது அரசியல் எதிரிகளும் பொய் புகார் மூலம் திலீப்பை குற்றவாளியாக்கி விட்டனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதைதொடர்ந்து திலீப்பின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 29-ந்தேதிக்கு (இன்று) நீதிபதி தள்ளிவைத்தார். அதன்படி இன்று காலை திலீப் ஜாமீன் மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்தது.

அப்போது திலீப்பின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் நடிகர் திலீப் ஜெயிலிலேயே தொடர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.