சினிமா

அதிரடி காட்டினாரா பசில் ஜோசப்? திரை விமர்சனம்

அதிரடி திரைப்படம் விமர்சனம்.

மாலை மலர்

தனது அண்ணன் படித்த அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்க சேர்கிறார் பசில் ஜோசப். சில வருடங்களுக்கு முன்பு அந்த கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அவரது அண்ணனின் காதலியான தர்ஷனா ராஜேந்திரன் உட்பட மூன்று மாணவிகள் உயிரிழக்கின்றனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு கல்லூரியில் கலை நிகழ்ச்சியே நடத்தப்படாமல் நிற்கிறது.

இந்த நிலையில், தனது அண்ணனின் ஆசையையும் நினைவையும் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், இன்னொரு பக்கம் சக மாணவியான ரியா ஷிபுவின் முன்னால் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற துடிப்பிலும், பல வருடங்களாக நின்று போன அந்த கல்லூரி விழாவை மீண்டும் நடத்த முயற்சி செய்கிறார் பசில் ஜோசப். ஒரு வழியாக நிர்வாகத்தின் அனுமதியையும் வாங்கி, சிறப்பு விருந்தினராக வினீத் ஸ்ரீனிவாசனையும் அழைக்க ஏற்பாடு செய்கிறார்.

அதே சமயம், ஒருகாலத்தில் அந்த ஏரியாவையே அதிரவைத்த ரவுடியான டொவினோ தாமஸ், தற்போது திருந்தி பாடகராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். தனது அம்மா சொல்லிக்கொடுத்த பாடலை பெரிய மேடையில் பாட வேண்டும் என்பதற்காக பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்து வருகிறார்.  இந்த நிலையில் பசில் ஜோசப் நண்பர்கள் குழுவுக்கும், டொவினோ தாமஸ் தரப்புக்கும் எதிர்பாராத மோதல் ஏற்படுகிறது.

இறுதியில் பசில் ஜோசப் கல்லூரியில் கலை நிகழ்ச்சியை நடத்தினாரா? ரவுடியான டொவினோ தாமசின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பசில் ஜோசப் வழக்கம்போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். வெளியில் பார்த்தால் சாதாரண, வெகுளி மாணவன் போல தெரிந்தாலும், உள்ளுக்குள் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போராடும் கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்சில் அவர் செய்யும் போராட்டம், வினீத் ஸ்ரீனிவாசனை மேடைக்கு கொண்டு வர முயற்சிப்பது எல்லாமே நம்மையும் அந்த பரபரப்புக்குள் இழுத்துச் செல்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் டொவினோ தாமஸ் தான். ஆரம்பத்தில் ஒரு சாதாரண பாடகர் போல தெரியும் அவரது கதாபாத்திரம், முன்னாள் ரவுடி என்று தெரியும் தருணம் மாஸ். அதற்குப் பிறகு அவர் காட்டும் உடல் மொழி, வசனம், காமெடி, எல்லாமே திரையை முழுக்க ஆக்கிரமிக்கிறது.

இவர்கள் இருவருக்கும் நடுவில் சிக்கிக் கொள்ளும் வினீத் ஸ்ரீனிவாசன் பல இடங்களில் கலகலப்பை கூட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் டொவினோ தாமஸை சமாளிக்க அவர் பயன்படுத்தும் யுக்தி தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறது.

ரியா ஷிபுவுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும், கதாநாயகனுக்கு உத்வேகம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். தர்ஷனா ராஜேந்திரன் குறுகிய நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். பசிலின் அண்ணனாக வரும் விஷ்ணு அகஸ்தியா எமோஷனல் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.  

மின்னல் முரளி படத்தில் பணியாற்றிய அருண் அனிருத்தன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படமென்றாலும், கேம்பஸ் விழாவையும், ஒரு முன்னாள் ரவுடியின் இசை கனவையும் இணைத்து வித்தியாசமான திரைக்கதையாக நகர்த்தியிருப்பது படத்தின் பலம். முதல் பாதியில் வரும் சில வழக்கமான கல்லூரி காட்சிகள் கொஞ்சம் பழக்கப்பட்ட பீல் கொடுத்தாலும், இடைவேளைக்கு பிறகு படம் எடுக்கும் வேகம் அதனை மறக்க வைக்கிறது.

சாமுவேல் ஹென்றியின் ஒளிப்பதிவு கேம்பஸ் கொண்டாட்டங்களை அழகாக பதிவு செய்து இருக்கிறது.விஷ்ணு விஜயின் இசை இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.