வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி-2’ படத்தில் பிசியாகி இருக்கிறார்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி கண்ட தனுஷ், ‘பா.பாண்டி’ படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில், படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பெங்களூரு சென்ற தனுஷ் - சுதீப்பை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்க முன்னதாக சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜூனாவுடன் பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #D37