இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பின. நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினர்.
இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட மேற்சொன்ன 8 பேருக்கும் உதகை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மே 23-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் 8 நடிகர், நடிகைகளும் உதகை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, சத்யராத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உதகை நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா உள்ளிட்டோரின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.