சினிமா

தாசரி நாராயண ராவ் மரணம்: தமிழ் திரையுலகத்தினர் இரங்கல்

பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்கத்தினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என தெலுங்கு சினிமாவின் சகாப்தமாக விளங்கிய தாசரி நாராயண ராவ் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150-க்கும் மேல் படங்களை இயக்கியதோடு பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை துறையினருடன் துக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.