சினிமா செய்திகள்

சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான்: யோகி பாபு

இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு 'அர்ஜுனன் பேர் பத்து'. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை பிரதீப் காளிராஜா செய்ய, மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பாடல்களை கார்த்திக் நேத்தா எழுத வசனத்தை எம். ஆர். அருண் சந்தர் எழுதியுள்ளனர். கலை இயக்க பணிகளை B. சேகர் மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஓம் பிரகாஷ் கவனித்துள்ளனர்.

தயாரிப்பு:

தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது, "எல்லாருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம், இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.

இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.

300 போதாது:

எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது. ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.

நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையை போல் நானும் நிறைய படங்கள் நடித்து பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் 2016- லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை. எந்த கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை. நமக்கு கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.

சினிமா கடினம்:

இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டி கொண்டிருக்கிறேன். நானும் பிரபு சாலமன் சாரும் 'மேம்போ' படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னை தான். வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது. சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான். சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்," என்றார்.

யோகி பாபுவின் 300 வது படமான 'அர்ஜுனன் பேர் பத்து' வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளியாக்கிறது.