சினிமா செய்திகள்

எந்த கெடுபிடி இன்றி ஒரு முதலமைச்சரை சந்திக்க முடிவதை இப்போதுதான் காண்கிறேன்- ஒய்.ஜி.மகேந்திரன் நெகிழ்ச்சி

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இது போன்று சாத்தியமா என்று தெரியவில்லை. அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்தார். எளிமையான அணுகுமுறையுடன் முதலமைச்சரை நேரில் சந்திக்க முடிந்தது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அழைப்பு

அப்போது வருகிற 13-ந்தேதி நடைபெறும் பாரத் கலாசார சபாவின் 38-வது மார்கழி இசை திருவிழாவிற்கு தலைமை தாங்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி விழாவுக்கு வருவதாக தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஒய்.ஜி.மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவாஜி தீவிர ரசிகர்கள்

முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் அவருக்கும் பொதுவான ஒற்றுமை பிணைப்பு உண்டு. 2 பேருமே நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்கள். ஏற்கனவே சிவாஜி எக்ஸ்லன்ஸ் விருதினை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாங்கியுள்ளேன்.

எளிமை

புதுச்சேரி எனக்கு பிடித்தமான இடம். என்னுடைய மாமா ஜிப்மரில் தான் டாக்டராக இருந்தார். என்னுடைய சின்ன வயது விடுமுறையெல்லாம் இங்கு தான் கழிந்தது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இவ்வளவு எளிமையாகவும், எவ்விதக் கெடுபிடிகளும் இன்றியும் நேரில் சென்று சந்திக்க முடியும் என்பதை என் வாழ்நாளில் முதன் முறையாக இப்போதுதான் காண்கிறேன்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இது போன்று சாத்தியமா என்று தெரியவில்லை. அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. இந்தியாவில் ஜனநாயகம் என்பது உண்மையில் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த எளிமையும் அணுகுமுறையும் நம் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் அமைந்தால் இந்தியா உலகிலேயே மிக வலுவான தேசமாக உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT