சினிமா செய்திகள்

"ராவணனாக மிரட்டும் யாஷ்!"-காஜல் அகர்வால் ஓபன் டாக்!

இப்படம் சுமார் 4,000 கோடி ரூபாய் பிரமாண்ட பட்ஜெட்டில், இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் "ராமாயணம்". இந்தத் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக சுமார் 4,000 கோடி ரூபாய் பிரமாண்ட பட்ஜெட்டில், இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் வரும் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால், உலகளவில் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராமரராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக 'கே.ஜி.எஃப்' புகழ் யாஷ், மண்டோதரியாக காஜல் அகர்வால், ஹனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். மேலும், இந்த மெகா பட்ஜெட் படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹன்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை காஜல் அகர்வால், இந்த பிரமாண்ட படைப்பில் நடித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சக நடிகரான கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் குறித்து அவர் கூறியதாவது: "நடிகர் யாஷ் ஒரு அபாரமான திறமை கொண்ட கலைஞர். அவருடன் இணைந்து பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.

'ராமாயணம்' திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பு. இந்திய சினிமா இதுவரை கண்டிராத பிரமாண்டத்தை இந்த படம் திரையில் கொண்டு வரும்."

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் மற்றும் ஹாலிவுட் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, காஜல் அகர்வாலின் இந்த பேட்டிக்குப் பிறகு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT