மேற்கு வங்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின் வெடித்த வன்முறையில்
2021 தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பாஜக 77 இடங்களை வென்றது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பாஜக தொண்டர்கள் மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில் முந்தைய சர்ச்சைகளை மீண்டும் கிளறி வருகிறது.
வழக்குப் பதிவு
இந்நிலையில் 2021 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சமூக வலைதளங்கள் வாயிலாக வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக பிரபல பெங்காலித் திரைப்பட நடிகர்களான பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் ஸ்வஸ்திகா முகர்ஜி ஆகியோர் மீது கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களது பதிவுகளே மாநிலத்தில் நடந்த பல அரசியல் மோதல்களுக்கு காரணம் என்று வழக்கறிஞர் ஜெய்தீப் சென் என்பவர் அளித்த புகாரின் பேரில் கரியாஹாட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று நடிகர் பரம்பிரதா சாட்டர்ஜி தனது பக்கத்தில், "இன்றைய நாளை உலக வன்முறை நாளாக அறிவிப்போம்" என்று பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவிற்கு நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, "Hahaha let it be" என்று கமெண்ட் செய்திருந்தார்.
வன்முறை
இந்த சமூக வலைதளப் பதிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, பெலியகட்டாவில் அபிஜித் சர்க்கார் என்ற பாஜக தொண்டர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
பரம்பிரதாவின் அந்தப் பதிவுதான் பாஜக தொண்டர்களுக்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியது என வழக்கறிஞரின் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்குப் பதிவு குறித்து நடிகர்கள் பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் ஸ்வஸ்திகா முகர்ஜி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.