தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது நீண்டகால காதலர் இசயா நட்டர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகளுடன் வைரலாகி வருகிறது.
அஞ்சனா அர்ஜுனும் இசயா நட்டரும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கோமோ ஏரிக்கரையில் இவர்களது நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
தனது திருமணப் புகைப்படங்களை அஞ்சனா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தங்களின் காதல் பயணத்தை விவரிக்கும் விதமாக 'To forever' எனக் குறிப்பிட்டு, தங்களின் 14 வருட காதலைக் குறிக்கும் வகையில் '#14yearslater' என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் புதுமணத் தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவைத் திருமணம் செய்துகொண்டார்.
அக்கா ஐஸ்வர்யாவைப் போல திரைத்துறையில் ஈடுபடாமல், இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் ஃபேஷன் மற்றும் தொழில்முனைவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது அவர் சர்வதேச அளவில் வடிவமைப்பாளர் கைப்பைகள் தயாரிக்கும் சொந்த பிராண்ட் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.