சினிமா செய்திகள்

'An Ordinary Man' படத்தின் 'லார்டா லபக்கா' பாடலின் லிரிகள் வீடியோ வெளியானது!

ரவிமோகன் இயக்கிய இப்படத்திற்கு கெனிஷா இசையமைத்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘An Ordinary Man' திரைப்படத்தின் புதிய லிரிக்கல் பாடலான ‘லார்டா லபக்கா’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கெனிஷா இசையமைத்துள்ளார்.

சித்தார்த் - மன்னர் முத்து குரலில் துள்ளல் கானா பாடல்

தற்போது வெளியாகியுள்ள ‘லார்டா லபக்கா’ பாடலுக்கு இசையமைப்பாளர் கெனிஷா இசையமைத்திருப்பதோடு, பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார். இப்பாடலை பிரபல நடிகர் சித்தார்த் மற்றும் மன்னர் முத்து ஆகியோர் இணைந்து மிகவும் உற்சாகமாகப் பாடியுள்ளனர்.

சரத் வினு உருவாக்கியுள்ள இதன் லிரிக்கல் வீடியோ, யோகி பாபுவின் நகைச்சுவையான உடல்மொழி மற்றும் துள்ளலான இசையுடன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இயக்குநராக அவதாரம் எடுத்த ரவி மோகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். யோகி பாபுவை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்திற்கு விவியன் அம்ப்ரோஸ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சிவா சண்டைப் பயிற்சியையும், சௌந்தர் நல்லசாமி கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். மேலும், ரகு தாபா நடன இயக்கத்தையும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

'RAW FILTER' ஆடியோ நிறுவனம் மூலம் வெளியாகியுள்ள இந்தப் பாடல், அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும் வெளியாகி டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT