சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவின் 26-வது படம்.. ரத்தக் கறையுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

'சத்ரியன்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் விக்ரம் பிரபு - யுவன் கூட்டணி

'டாணாக்காரன்', 'சிறை' போன்ற ஆழமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது அடுத்த பிரம்மாண்ட படத்திற்கு தயாராகிவிட்டார்.

அவரது திரைப்பயணத்தில் 26-வது திரைப்படமாக உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுமுக இயக்குநர்.. மிரட்டலான போஸ்டர்!

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் சித்தார்த் எழுதி இயக்குகிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு மரப்பலகையின் மீது தங்கக் கட்டி உருகி ஓடுவது போன்றும், அதன் மீது ரத்தக் கறையுடன் கூடிய காலடித் தடங்கள் இருப்பது போன்றும் அந்தப் போஸ்டர் மிரட்டலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

'யுவன்' கூட்டணி!

இப்படத்திற்குப் பலமாக 'யங் மேஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'சத்ரியன்' (2017) திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணையும் இரண்டாவது கூட்டணி இது என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், இப்படத்திற்கு கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவையும், அருள் மோசஸ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

ஷூட்டிங் எப்போது?

முழுக்க முழுக்க கமர்ஷியல் மற்றும் அதிரடி அம்சங்களுடன் உருவாகவிருக்கும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, வரும் செப்டம்பர் மாதத்தில் முழுவீச்சில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கதையின் விறுவிறுப்பு மற்றும் சூழல் மாறாமல் இருக்க, ஒரே கட்டமாக முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.