சினிமா செய்திகள்

இனிமே கெஸ்ட் ரோல் பண்ண மாட்டேன்!- விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு!

"இயக்குநர்கள் என்னிடம் வரும்போது ஒரு தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுக்காமல், கதாநாயகனை உயர்த்திப் பிடிப்பதற்காகவே என்னை அணுகுகிறார்கள்"

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இனி திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்கு மட்டுமே தாம் இதில் ஒரே விலக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறு படங்களின் வியாபார பாதிப்பு:

நான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ஒருபுறம் இருக்க, நட்பின் அடிப்படையில் சில சிறிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தப் படங்களின் விளம்பர போஸ்டர்களில் எனது புகைப்படத்தைப் பெரிய அளவில் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். இது நான் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் வணிகத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் பெரிதும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

பிரமோஷன் உத்திகள்:

தான் உதவும் மனப்பான்மையோடு செய்யும் சிறு கதாபாத்திரங்கள், தவறான முறையில் விளம்பரம் செய்யப்படுவதால் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்குப் பின்னடைவு ஏற்படுவதாக உணர்ந்து இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

'ஜெயிலர் 2' படத்திற்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது குறித்துப் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தில் ரஜினி சாருக்காக மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன். ரஜினி சார் போஸ்டரில் இருக்கும்போது மக்கள் அனைவரும் அவரையேதான் பார்ப்பார்கள், என் புகைப்படம் இருந்தால் யாருடைய கவனமும் அதில் செல்லாது.

அதோடு, அவருடன் இணைந்து பணியாற்றுவதையும் அவர் அருகே இருப்பதையும் ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகப் பார்க்கிறேன். அதனால்தான் ரஜினி சாருக்காக இந்த ஒரு விதிவிலக்கைச் செய்தேன்" எனக் கூறியுள்ளார்.

வில்லன் வேடங்களுக்கும் 'நோ':

முன்னதாக, முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நெகட்டிவ் பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தப்போவதாகவும் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். "இயக்குநர்கள் என்னிடம் வரும்போது ஒரு தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுக்காமல், கதாநாயகனை உயர்த்திப் பிடிப்பதற்காகவே என்னை அணுகுகிறார்கள்" எனக் கூறியிருந்த அவர், தற்போது கெஸ்ட் ரோல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

'ஜெயிலர் 2' மற்றும் அடுத்தடுத்த படங்கள்:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விஜய் சேதுபதி கைவசம் மிஷ்கினின் 'டிரெயின்', வெற்றிமாறனின் 'அரசன்', மணிரத்னம் - சாய் பல்லவி இணையும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.