சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள 'Train' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது!

தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் நாசர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ (TRAIN) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், “ரயிலுக்குள் ஒரு போர்” (War in the Train) என்ற அதிரடியான வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்

நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

‘பிசாசு 2’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, இப்படத்தின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கத்தில் முழுநீளக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒரு ரயில் பயணத்தின் போது நடக்கும் மர்மங்கள், எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தை மையமாக வைத்து, முழுக்க முழுக்க ரயிலுக்குள்ளேயே நகரும் பரபரப்பான ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் நாசருடன் ஸ்ருதி ஹாசன், நரேன், யூகி சேது, கே.எஸ். ரவிகுமார், சம்பத் ராஜ், கலையரசன், ஜெயராம், டிம்பிள் ஹயாதி, வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள மிஷ்கின், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்குத் திரும்பியுள்ள ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ வாட்சன் மற்றும் ஷபான் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளனர்.

SCROLL FOR NEXT