பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்தால் தவெகவினர் கொந்தளித்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது.
ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.
தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை என பேசியிருந்தார்.
தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதலமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக கடுப்பான தவெக தொண்டர்கள் (விர்ச்சுவல் வாரியர்ஸ்) விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி கருத்துக்கு நிகழ்ச்சியை நடத்தும் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.
இன்று புதிய புரோமோ வீடியோ வெளியிட்டுள்ள தொலைக்காட்சி, “இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறப்படும் கருத்துகள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் எனக்கும் மட்டுமேயானது.
இது வெளியில் இருக்கும் எந்தவொரு நபரையோ அமைப்பையோ குறிப்பிட்டு பேசியதில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனை கடந்த வாரமே கூறி இருக்க வேண்டும். நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என இருந்தேன். தற்போது இதனைத் தெளிவுப்படுத்த வேண்டிய தேவை இருந்தது” என அதில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.