சினிமா செய்திகள்

‘ஜன நாயகன்’ Leak... ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா

சக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என தங்கள் கனவுகள் அனைத்தையும் பந்தயமாக வைத்துப் பணியாற்றும் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இப்படம் வெளியாகவில்லை.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு பெரிய அடியாக 3 மணி நேரம் 3 நிமிடங்கள் கொண்ட ‘ஜன நாயகன்’ முழு படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனமும், படக்குழுவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியான சம்பவம் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது.

எனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில், இது போன்றதொரு நிகழ்வு நடந்தபோது ஏற்பட்ட வேதனையையும், இழப்பு உணர்வையும் நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். அப்போது ஒருவர் தன்னை ஒரு தாக்குதலுக்கு இலக்கானவராகவே உணர்வார்; நம்பிக்கையை இழந்தது போலத் தோன்றும். இது என்னைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல; இதில் சக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என தங்கள் கனவுகள் அனைத்தையும் பந்தயமாக வைத்துப் பணியாற்றும் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய இந்தப் பிரச்சனை கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும்; இதற்குப் பின்னால் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், அது ஒரு அமைப்பியல் தோல்வியையே பிரதிபலிக்கும். மனிதர்கள் எத்துணை உணர்வற்றவர்களாக இருக்க முடியும் என்பதையும், சற்றும் யோசிக்காமல் பிறருக்குத் தீங்கு விளைவிக்கச் சிலர் எந்த எல்லை வரையிலும் செல்வார்கள் என்பதையும் இச்சம்பவம் நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது.

இப்படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.