சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர் 2' ஜெயிலர்.
இப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் தினசரி வீடியோக்கள் மூலம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன் இப்படத்தில் 'காந்தா' என்ற பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதிசெய்து, அவரது அதிரடி அறிமுக வீடியோ வெளியானது! சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் வசூலில் ரூ.600 கோடிக்கும் மேல் குவித்து உலகளாவிய சாதனை படைத்தது. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் 'ஜெயிலர் 2' மிக விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாகப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை நெல்சன் ஸ்டைலில் படக்குழுவினர் வீடியோ மூலம் அறிமுகம் செய்து வருகின்றனர்.
சூரஜ் வெஞ்சரமூடு: மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு 'திலீப்' என்ற தீவிரமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முதல் வீடியோ வெளியானது.
எஸ்.ஜே.சூர்யா: மிரட்டலான லுக்கில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'போதி' என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் வீடியோ நேற்று வெளியாகி வைரலானது.
வித்யா பாலன்: தற்போது பாலிவுட் பிரபலம் வித்யா பாலன் 'காந்தா' என்ற மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம், வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகத் தயாராக உள்ளது