டாம் ஸ்கெரிட் 
சினிமா செய்திகள்

'Alien', 'Top Gun' உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த ஹாலிவுட் நடிகர் டாம் ஸ்கெரிட் மறைவு

60 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில் ஸ்கெரிட் பல புகழ்பெற்ற பாத்திரங்களில் நடித்தார்.

ஹாலிவுட் நடிகரும், எம்மி விருது வென்றவருமான டாம் ஸ்கெரிட் (93) காலமானார்.

'ஏலியன்' மற்றும் 'டாப் கன்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் அறியப்பட்ட ஹாலிவுட் நடிகர் டாம் ஸ்கெரிட் (93) காலமானார்.

அறிவிப்பு

வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் நேற்று முன் தினம் (புதன்கிழமை) காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.

தனது நகைச்சுவை, அறிவு மற்றும் தாராள குணத்தால் அவர் தங்கள் வாழ்க்கையை அன்பால் நிரப்பினார் என்று அவரது குடும்பத்தினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

அவருக்கு மனைவி ஜூலி டோகாஷிகி, ஐந்து பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

திரை வாழ்க்கை

60 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில் ஸ்கெரிட் பல புகழ்பெற்ற பாத்திரங்களில் நடித்தார்.

நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய ஸ்கெரிட், 1962ஆம் ஆண்டு 'வார் ஹன்ட்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

'M*A*S*H', 'Steel Magnolias', மற்றும் 'A River Runs Through It' போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

குறிப்பாக 1979ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை திகில் கிளாசிக் படமான 'ஏலியன்'இல் விண்கல கேப்டன் டல்லாஸ் பாத்திரத்திற்காகவும், 1986ஆம் ஆண்டு வெளியான 'டாப் கன்' திரைப்படத்தில் டாம் குரூஸின் பயிற்சியாளரான கமாண்டர் "வைப்பர்" பாத்திரத்திற்காகவும் நடித்ததன் மூலம் அவர் அறியப்பட்டார்.

விருது

1992 முதல் 1996 வரை ஒளிபரப்பான 'பிக்கெட் ஃபென்சஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் ஷெரிப் பாத்திரத்தில் நடித்ததற்காக, 1993ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான எம்மி விருதை வென்றார்.

சமூக பணி

நடிப்பைத் தவிர, ஸ்கெரிட், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவ 'ரெட் பேட்ஜ் ப்ராஜெக்ட்' என்ற அமைப்பையும், இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க 'தி ஃபிலிம் ஸ்கூல்' என்ற அமைப்பையும் நிறுவினார்.

SCROLL FOR NEXT