இயக்குனர் வெங்கட் பிரபு  
சினிமா செய்திகள்

சினிமா பயணத்தில் 20 ஆண்டுகள் - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு...

னது ஒவ்வொரு புதிய முயற்சியையும் ஊக்கப்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள்.

நான் விரும்பியதை தொடர்ந்து செய்வதற்கு மிக முக்கியமான காரணம் நீங்கள் தான் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் திரைத்துறையில் தனது 20 ஆண்டு காலப் பயணத்தை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது அறிமுகத் திரைப்படமான ‘சென்னை 600028’ படத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்காக, மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு தனது முதற்கண் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த இருபது ஆண்டுகள் ஒரு அழகான பயணமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானது, ஒவ்வொரு கதையும் புதிய சவால்களைக் கொண்டு வந்தது, மேலும் ஒவ்வொரு அனுபவமும் எனக்கு புதிதாக ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்தது. சில படங்கள் உடனடியாகக் கொண்டாடப்பட்டன, சில படங்கள் காலப்போக்கில் அன்பைப் பெற்றன, மேலும் சில படங்கள் நான் வளர்வதற்கு உதவிய பாடங்களாக அமைந்தன. ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியிலும், சினிமா மீதான எனது ஆர்வம் நாளுக்கு நாள் வலுவடைந்து மட்டுமே இருக்கிறது.

தான் மேற்கொண்ட புதிய முயற்சிகளுக்குக் கிடைத்த ஆதரவே திரையுலகில் தனது இந்த நீண்ட நெடிய பயணத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மேலும் கூறியதாவது:-

"நான் விரும்பியதை தொடர்ந்து செய்வதற்கு மிக முக்கியமான காரணம் நீங்கள் தான். எனது ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களின் போதும் நீங்கள் என்னுடன் துணை நின்றிருக்கிறீர்கள்; எனது ஒவ்வொரு புதிய முயற்சியையும் ஊக்கப்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள். அந்த அன்பு தான் எனக்கு எப்போதும் முன்னோக்கிச் செல்வதற்கான தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்."

தனது வழக்கமான பாணியில் புதிய முயற்சிகளுடன் பயணத்தைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெங்கட் பிரபுவின் இந்த பதிவிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.