திரையுலகிலும் ஓடிடி தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் வரவிருக்கும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் உலகளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள ‘டைவா கோட்டிங்’ என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இதையும் இயக்கி எழுதியுள்ளார். முன்னணி தயாரிப்பாளர்களான புஷ்கர்-காயத்ரி தங்களது 'வால்வாட்சர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகரும் இயக்குநருமான 'சசிகுமார்' சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற அதிரடியான காவலர் கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.
இந்தக் க்ரைம்-த்ரில்லர் தொடரில் சசிகுமாருடன் இணைந்து, அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடருக்கு 'சைமன் கே.கிங்' இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள 'டைவா கோட்டிங்' பாடல் துள்ளலான இசையுடனும், அட்டகாசமான காட்சிகளுடனும் இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மதுரையின் பின்னணியில் நடைபெறும் அரசியல், வதந்தி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த க்ரைம் புலனாய்வுக் கதையாக 'வதந்தி சீசன் 2' உருவாகியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் 8 அத்தியாயங்களாக ஒளிபரப்பாகவுள்ள இத்தொடருக்கு ஓடிடி பார்வையாளர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.