தென்னிந்தியத் திரையுலகின் 'இசைக்குயில்' என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியத் திரை உலகமே தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறது.
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 4 முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கி குவித்த தென்றல் இசை பாடகி, தேன் குரல் தேவதை எஸ்.ஜானகி மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகிறது.
நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னை தேடுதே என்று நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம் தந்து விட்டாரே.. நீங்காத சோகம்... வசந்தம் பாடி வர.. வைகை ஓடி வர... இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை... செய்யட்டுமா என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர் பாட்டுக்கு அமுதூட்டியவர்.
சம்சார சங்கீதம் படத்தில் என் மகன் சிலம்பரனுக்காக ‘ஐ அம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...’ என்று பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டுவிட்டது.
அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தினருக்கும். இந்திய கலை உலகத்தாருக்கும், ரசிகர் களுக்கும் ஆறுதலையும் இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.