'கே.ஜி.எஃப்' திரைப்படங்களின் மூலம் பான்-இந்திய அளவில் முத்திரை பதித்த நடிகர் யஷ் நடிப்பில், கீது மோஹன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'டாக்ஸிக்'.
உலகளாவில் ஆகஸ்ட் 2026-ல் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் புதிய அப்டேட்டுகள் தற்போது கோலிவுட் மற்றும் சாண்டல்வுட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தபாஹி' தற்போது வெளியாகியுள்ளது. விஷால் மிஸ்ரா இசையமைத்துள்ள இப்பாடலின் தமிழ் பதிப்பிற்கு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார்.
காதல் மற்றும் சண்டை நிறைந்த இப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் நடிகர் யஷ் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் தோன்றியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
'டாக்ஸிக்' படத்தில் நயன்தாரா நெகட்டிவ் அல்லது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு, படக்குழு சமீபத்தில் வெளியிட்ட 'Ladies & Ladies' என்ற பிரத்யேக ப்ரோமோ வீடியோ மற்றும் கதாபாத்திரப் பெயர்கள் விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளன.
இப்படத்தில் நயன்தாரா 'கங்கா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல. கதையின் போக்கையும் அதிகார சமநிலையையும் மாற்றக்கூடிய, அதிரடியான 'நெகட்டிவ் ஷேட்ஸ்' கொண்ட பவர்ஃபுல் கதாபாத்திரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ப்ரோமோ வீடியோவில் நயன்தாரா சூப்பர்பைக் ஓட்டுவது போன்றும், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளார்.
இயக்குனர் கீது மோஹன்தாஸ், இப்படத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்களை வெறும் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், கதையை நகர்த்திச் செல்லும் 'டார்க்' மற்றும் 'கிரே' ஷேட்ஸ் கொண்ட வலிமையான கதாபாத்திரங்களாக மாற்றியுள்ளார்.
"காதல் பெண்களை அரக்கர்களாக மாற்றுகிறது" என்ற பின்னணிக் குரலுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா ஆகியோரின் மிரட்டலான தோற்றங்கள் இந்த ப்ரோமோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகப் படமாக்கப்பட்டு வரும் 'டாக்ஸிக்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு, வரும் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.