சினிமா செய்திகள்

டாக்ஸிக் - விமர்சனம்!

யார் யாரை நம்புகிறார்கள், யார் யாரை துரோகம் செய்கிறார்கள் என்ற கேள்வியுடன் கதை நகர்ந்திருக்கிறது.

நயன்தாரா, யஷ் திருடர்களாக இருந்து டான் கும்பலில் சேர்கின்றனர், யஷின் இரு காதல் விவகாரத்தால் கொலைகள் நடக்கின்றன. கடைசியில் தாரா, நயன்தாரா, கியாரா இடையே நடக்கும் கொலைகள் படத்தின் முக்கிய திருப்பம். படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் சில இடங்களில் குழப்பமாகவும் நீளமாகவும் உள்ளது.

கதை

சிறுவயதிலேயே பெற்றோரை இழக்கும் நயன்தாராவும், அவரது தம்பி யாசும் திருட்டை வாழ்க்கையாக மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் துணிச்சலை கவனிக்கும் மிகப்பெரிய டான், இருவரையும் தனது கும்பலில் சேர்த்துக் கொள்கிறார்.

அதன்பிறகு கடத்தல், கொள்ளை என குற்ற உலகில் தங்களுக்கான இடத்தை பிடிக்கிறார்கள்.

முதலாளியின் மகளான தாரா சுதாரியாவை யஷ் காதலிக்கிறார். அதேநேரம் சர்க்கஸ் கலைஞராக வரும் கியாரா அத்வானியுடனும் அவருக்கு நெருக்கம் ஏற்படுகிறது.

கியாரா கர்ப்பமாகும் நிலையில், காதல், கோபம், துரோகம் என பிரச்சினை பெரிதாகிறது.

ஒருகட்டத்தில் தாரா, யஷை துப்பாக்கியால் சுட, அவரை நயன்தாரா கொலை செய்கிறார். பின்னர் நயன்தாராவை கியாரா கொலை செய்ய, கதை எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கிறது.

கியாரா ஏன் நயன்தாராவை கொன்றார்? துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய யாஷின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

ராயா கதாபாத்திரத்தில் யாஷ் கம்பீரமான தோற்றத்துடனும் மிரட்டலான உடல்மொழியுடனும் கவனம் ஈர்க்கிறார்.

குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது திரை இருப்பு படத்திற்கு பலம். நயன்தாரா, தம்பிக்காக எதையும் செய்யத் துணியும் அக்காவாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இருவருக்குமான சகோதர பாசம் படத்தின் முக்கியமான உணர்வுப்பூர்வமான அம்சமாக உள்ளது.

கியாரா அத்வானி சர்க்கஸ் கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார். தாரா சுதாரியா, ஹுமா குரேசி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் குடும்ப உறவு, காதல், சகோதர பாசம், துரோகம் என பல அம்சங்களை இணைத்து வித்தியாசமான உலகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்.

யார் யாரை நம்புகிறார்கள், யார் யாரை துரோகம் செய்கிறார்கள் என்ற கேள்வியுடன் கதையை நகர்த்தியிருப்பது சுவாரஸ்யம்.

சில இடங்களில் ஏன் சண்டை, எதற்காக மோதல் என்பதே புரியாமல் உள்ளது.

நீண்ட நேரப் படமாக இருப்பதால் சில காட்சிகளை குறைத்திருந்தால் வேகம் கூடியிருக்கும் என்ற கருத்துக்களும் வெளியாகியுள்ளது.

நடிகர்கள்

'கே.ஜி.எஃப்' படங்களுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்திருக்கும் ராக்கிங் ஸ்டார் யஷ், தனது அசாத்திய உடல்மொழி, ஆக்ரோஷமான லுக் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

மாஃபியா தலைவியாக வரும் ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா, ருக்மிணி வசம்த் ஆகியோரும் துறுதுறுப்பான, மிரட்டலான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு கோவாவின் பழங்காலத் தெருக்களையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் மிக பிரம்மாண்டமாகப் படம் பிடித்துள்ளது.

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோரின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்குத் தேவையான மாஸ் மற்றும் பலத்தைக் கொடுத்துள்ளன.

ஹாலிவுட் தரத்தில் அனல்பறக்கும் சண்டைக் காட்சிகளை ஜே.ஜே.பெர்ரி மற்றும் அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT